Author: பிரமிள்

இரவின் நிழலே பகல்; இருளின் சாயை ஒளி.

‘கீதையைக் கேட்க அர்ச்சுனன் இல்லையென்றால் கூப்பிடு கௌரவரை’ யென்றான். பறந்தது போன் செய்தி போலீசுக்கு.

பரிதியைத் தீண்டும் ஒரு பனி விரல். இவ்வொளி யோனியை தடவி விரித்தது எவர்கை? எவ்வகைப் பிரியம்?

யுகாந்திரங்களாயினும் நிலைத்திருப்பது ஒரு கணம் இக்கணம். மறுகணம் மீண்டும் எதிரேறும் எதிர்காலம்.

ஒளியைப் பிரதியெடுக்க மனசை விரித்தேன் மனதானேன்.

இருள். இதயத்தை மூடும் மனசின் சவப்பாறை.

புல்நுனி மீதுறையும் பனித்துளியில் ஒரு மலையின் பிரதிபிம்பம்.

விளிம்பு சரியவில்லை. புல்லின் வேர்கள் பின்னிப் படர்ந்து கவ்வி இறுகிய விளிம்பு சரியவே இல்லை.